Friday, October 12, 2007

தமிழ்நாட்டுக்கும் இராமருக்கும் பூணூல் பாலம்..

தினமணி நாளிதழ் தன் நடுநிலையை இழந்து ஒரு சார்பாக போய்விட்டது என்று என் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். எனக்கும் சமீபகாலமாய் அந்தக் கருத்து உருவாகி இருந்தது.

பத்திரிகை உலகின் தன்னிகரற்ற மனிதராக விளங்கிய அய்யா திரு.இராம.திரு.சம்பந்தம் அவர்களுக்குப் பிறகு தினமணி தன் நடுநிலையை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருகிறது என்பது தினமணி வாசகர்களில் பெரும்பான்மையினர் கருத்தாக உள்ளது.

கிராமப்புறங்களில் "ரெக்கார்டு டான்ஸ்" என்கிற பெயரில் நடன நிகழ்ச்சி நடைபெறுவதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அதில் பாடல்கள் இசைக்கப்படும், மேடையின் மீது ஒன்று அல்லது இரண்டு பெண்கள் நடனமாடுவார்கள். இசையின் வேகத்திற்கு ஏற்ப தான் அணிந்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி எரிவார்கள். ஒருகட்டத்தில் கழற்றி எரிய ஆடை இல்லாமல் அம்மணமாய் நிற்கும் போது. வேறு வழியின்றி விளக்குகள் அணைக்கப்படும். நிகழச்சி முடிவடையும். பார்த்துவிட்டு வந்த நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். அப்போது சட்டென எனக்கு நினைவுக்கு வந்தது தினமணி நாளிதழ்தான்.

மொழியுணர்வுத் தீப்பந்தமாய் இருந்த நம் அய்யா சம்பந்தம் அவர்கள் தினமணிக்கு - ஆடைபூட்டி அழகு பார்த்தார். இப்போது கடைசியாய் கட்டுரைகள், தலையங்கங்கள், கருத்துபடங்கள் என எழுதி வேறு வழியின்றி விளக்குகளை அணைத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டுக்குள் பத்திரிகை விற்று அந்த பணத்தில் வாழும் இவர்கள் தமிழ் நாட்டின் 100 ஆண்டுகால கனவுத் திட்டத்தை எதிர்க்க வடநாட்டு கும்பலோடு கைகோர்த்து, இராமர் பாலம் வழியாக ராமராஜ்ஜியம் அமைக்க புதியதாக கிளம்பி உள்ளார்கள்.

தினந்தோறும் பரப்பும் பொய்யுரைகளுக்கு பதிலளித்தால் நாம் வேறு வேலை பார்க்க முடியாது (அவர்களுக்கு இதுவே வேலை). நாம் பார்க்கும் வேலையின் நடுவே இளைப்பாறுதல் தான் இது போன்ற பதிவுகள். "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்று கூறுவார்களே, அது தற்போது நடந்துள்ளது. தினமணியே உங்களின் நிலையைத் தெளிவாக அறிவித்தற்கு மிக்க நன்றி.

மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஏற்க செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி. தந்தை பெரியாரோ, பேரறிஞர் அண்ணாவோ, தமிழக முதல்வர் கலைஞரோ "கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி" என்று கூறுவது தன் வீட்டில் உள்ளவர்களை விலக்கி அல்ல, அவர்களையும் உள்டக்கித்தான். " வீட்டை திருத்தி விட்டு நாட்டுக்கு வா" என்கிறீர்கள். மகிழ்ச்சி, எங்கள் வீடும் நாட்டுக்குள் தான் இருக்கிறது. பிரச்சாரம், அறிவுரை எல்லாம் எங்கள் வீட்டில் உள்ளவர்க்கும் சேர்த்துதான்.

"இதிகாசம், புராணம், சரித்திரம் ஆகியவை சமுதாயத்தின் அருமை பெருமைக்கு ஆதாரமாக உள்ளது" தினமணியின் கண்டுபிடிப்பு. இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். சூத்திரன் சம்பூகன் தவம் செய்வதைக் கண்ட பார்ப்பனர்கள், மனுதர்மப்படி சூத்திரனுக்கு அந்த தகுதி கிடையாது என்று இராமனிடம் முறையிட இராமனோ சம்பூகன் தலையை கொய்து விடுகிறான். இது தான் இராமனின் பண்பாடு. சூத்திரன் படித்தால் நாக்கை அறு, படிப்பதை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று எனக்கூறுவது மனுதர்ம பண்பாடு. மனுமர்மத்தை உயர்த்தி பிடிக்கும் இராமனை, அத்வானியும் இல.கணேசனும் வைத்திய நாதன்களும், துக்ளக் சோ-க்களும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடலாம், அவர் வழி நடக்கலாம். சூத்திர கலைஞருக்கும் மற்றவர்களுக்கும் அவசியமில்லை.

இறை மறுப்பு இயக்கம் இந்தியாவிலும் மட்டுமல்லாது உலக நிலையிலும் தோல்வியைக் கண்டுள்ளது என்று " தினமணி" கூறுவது தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது. மனிதனின் பரணாம வளர்ச்சியை கூறும் டார்வின் தத்துவத்தை கத்தோலிக்க மதகுரு போப் ஜான்பால் (கடந்த முறை பதவி வகித்தவர்) கருத்தியல் ரீதியாக ஏற்றுக்கொன்டார் என்பது உலகம் அறிந்த உண்மை. தமிழகத்தில் பெரியாருக்கு பிறகு பக்தி அதிகமாகி விட்டதாக கூறுகின்றீர்கள், சரி ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம். இராமரையும் அவரது பாலத்தையும் பாதுகாக்க, குரல் கொடுக்க, வடநாட்டு அத்வானியும், சோ, இல.கணேசன், இராமகோபாலன், வைத்தியநாத அய்யர்களை தவிர வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை. காரணம் பெரியாரின் பகுத்தறிவு வெளிச்சம்.

இந்தியாவின் உயர்ந்த பீடமாக கருதப்பட்ட "லோக குரு" காஞ்சி - சங்கராச்சாரியாரை கைது செய்தபோது சங்கரமடத்தின் பக்கத்து தேநீர் கடை கூட மூடப்படவில்லை. இதுதான் உங்கள் நிலை தமிழகத்தில்.


எந்தவொரு பகுத்தறிவாளனும் கோயிலுக்குள் சென்று கொலை செய்தது கிடையாது. அடுத்த மதத்துக்காரனை உயிரோடு எரித்தது கிடையாது. அவனது வழிபாட்டுத்தளத்தை இடித்தது கிடையாது. "கடவுள் இல்லை" என்று கூறும் ஒருவரால், ஒரு கோயிலுக்கோ, ஒரு மசூதிக்கோ, ஒரு தேவாலயத்துக்கோ பாதிப்பு ஏற்பட்டிடருக்கமா? அன்பை போதித்த 8000 சமணர்களை கழுவேற்றி கொன்ற பெருமையுடையதுதான் உங்கள் இறை நம்பிக்கை.

சேது சமுத்திர திட்டம் என்பது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் ஓர் அற்புதமான திட்டம். சுமார் பத்துக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டு, வேலைவாய்ப்பை பெருக்கி தென்னகத்தை முன்னேற்றும் என்பது மறுக்க இயலா உண்மை.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றபட வேண்டுமா? அல்லது இந்துமத உணர்வுகளை தூண்டி விட்டு தமிழகத்தின் வளம் கொழிக்கும் திட்டத்தை கெடுக்க வேண்டுமா? என்பதை மக்கள் மன்றத்திடம் விடுவோம். அவர்கள் முடிவு செய்யட்டும். அதுவரை இராம பக்தர்கள் பஜனை செய்யுங்கள், இராமராவது தமிழ்நாட்டு மக்கள் மனதில் புகுந்து மாற்றம் செய்வாரா? பார்ப்போம். கடவுள் இருந்தால் தனது பாலத்தைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் உங்களுக்கு ஏன் கவலை?

No comments: