Wednesday, October 10, 2007

ராமனை மரபணுச் சோதனைக்குட்படுத்த முடியுமா?

``யாகாவாராயினும் என்னும் தலைப்பில் `தினமணி தலையங்கம் தீட்டியுள்ளது (20.9.2007).
ராமனைப்பற்றி எழுந்துள்ள பிரச்சினைக்காக எழுத வந்த தினமணி, ராமன் இருந்தான் என்பதற்காக ஆதாரம் இல்லை என்று கூறியதற்காகவும், ராமன் பாலம் கட்டினான் என்கிறார்களே - ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று முதலமைச்சர் கலைஞர் வினா எழுப்பியதற்காகவும் மிகவும் வருந்தி வருந்தி எழுத்தாணியை ஓட விட்டுள்ளது.

ராமர் இருந்தாரா, ஏசுநாதர் இருந்தாரா, புத்தர் இருந்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்குவது அபத்தம், அதற்கான ஆதாரத்தைக் காட்டு என்று கேட்பது அதைவிட அபத்தத்திலும் அபத்தம் என்று அந்தத் தலையங்கம் சொல்லுகிறது.
இதில் பார்ப்பனருக்கே உள்ள குறும்புத் தனத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.

புத்தர் என்ற வரலாற்றுப் பாத்திரத்தையும், ராமன் என்ற இதிகாச பாத்திரத்தையும் ஒரே நிலையில் வைத்துப் பேசுவது சரியானதுதானா? பார்ப்பனர்களின் (குறிப்பாக `சோ ராமசாமி, குருமூர்த்தி போன்றவர்களின்) விவாத முறை எந்த குயுக்தியில் இருக்குமோ அதேமுறை - தொனிப்பு இதிலும் காணப்படு வதை அறியலாம். `துக்ளக் இதழில் தயாரிக்கப்பட்ட ஒருவர் `தினமணியின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார் என்பதைத் துல்லியமாகக் காட்டும் அடையாளம் இது.


வரலாற்றுக் கண்ணோட்டம், அறிவியல் கண் ணோட்டம் - இவற்றிற்கு அப்பாற்பட்டது உலகில் எதுவும் இல்லை.
ராமன் பாலம் கட்டினான் என்ற பிரச்சினையைக் கிளப்புபவர்கள் இவர்கள். அப்படி வரும்போது ராமன் பாலத்தைக் கட்ட முடியுமா? அதுவும் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுவது இயல்புதானே?
முதல் பாலம் கட்டப்பட்டதே கி.மு. 2650 இல் எகிப்து நாட்டின் நைல் நதியின் குறுக்கே என்பதற்கு ஆதாரம் இருக்கும்போது, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பாலம் எப்படி கட்டப்பட்டு இருக்க முடியும் என்கிற கேள்வி எழாதா? இதிகாசம், புராண சங்கதி என்கிற இடத்தில் மட்டும் மனிதன் தன் அறிவைப் பூட்டுப் போட்டுப் பூட்டி வைத்துக்கொள்ள வேண்டுமா? எல்லாமே பார்ப்பன வசதிக்காகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற அடாவடித்தனம் இதில் புழுபோல நெளிகிறதா இல்லையா?


17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டினான் என்பதைவிட அபத்தத்திலும் அபத்தம் வேறு உண்டா? இதில் இன்னொரு குமட்டிக் கொண்டு வரும் அபத்தம் உண்டு. இதோ `தினமணி எழுதுகிறது.
``ஒரு குழந்தையின் தந்தை யார் என்பதை அந்தக் குழந்தையின் தாய் சொல்வதை சமுதாயம் ஏற்றுக் கொள்கிறதே தவிர மரபணு பரிசோதனைச் சான்றிதழ் கேட்பதில்லை - இதுதான் தினமணியின் விவாதம்.

`தினமணி எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறது என்று தெரியவில்லை. எத்தனையோ வழக்குகள் நாட்டில் நடந்துகொண்டுதானிருக்கின்றன! பிரச்சினை என்று வருகிறபோது மரபணுச் சோதனை நடத்தப்பட்டுத் தானே தீர்மானிக்கப்படுகிறது?
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும்போது ராமன் பாலம் என்ற பிரச்சினையைப் பார்ப்பன சங் பரிவார்க் கூட்டம் எழுப்பிய நிலையில், `அந்த மரபணுச் சோதனைகள் தேவைப்படத்தானே செய்கின்றன?

`தினமணி எந்தத் தைரியத்தில் இப்படி எழுதுகிறது என்றால், ராமனை மரபணுச் சோதனை செய்ய முடியாது - காரணம் அவன் குதிரைக்கும், கோசலைக்கும் பிறந்த வன் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறதல்லவா!

நன்றி : விடுதலை

No comments: