Sunday, October 7, 2007

காந்தின்னா யாரு, அந்த ஆயிரம் ரூபா நோட்டுகள்ல சிரிச்சிட்டிருந்தாரே அவரா?

தமிழக அரசினை ஏன் டிஸ்மிஸ் செய்யக் கூடாது?" என்று டெல்லியில் உள்ள அதிமுக தலைமையகம் சாரி, இந்த நாட்டின் உச்ச நீதி மன்றம், ஓர் உன்னதமான கேள்வியை எழுப்பி உள்ளது. வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டு அந்த சூட்டோடு ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டு அன்றே விசாரிக்கப்பட்டு மறு தீர்ப்பும் அங்கே வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை காலை, முதல் வேலையாக, உச்சநீதிமன்றம், தனது முந்தைய நாள் தீர்ப்பு குறித்த அலசல் நிகழ்த்தி இருக்கிறது. இந்த நாட்டில் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேறு பிரச்னைகளே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது அல்லவா ராமராஜ்யம்?

"என்ன, சென்னையின் சாலையில் பேருந்துகள் ஓடவில்லையா? ஆஹா, எங்கள் கட்டளை நிறைவேற்றப் படவில்லையா? மறைமுகமாக பந்த் அனுசரித்து விட்டார்களா? முதலமைச்சர், காந்தி பாணியில் உண்ணாவிரதம் இருக்கிறாரா? காந்தின்னா யாரு, அந்த ஆயிரம் ரூபா நோட்டுகள்ல சிரிச்சிட்டிருந்தாரே அவரா? தொலையட்டும். . . . நீ மாலை அணிந்து கொண்டு போய் உன் அண்ணனை வம்புக்கு அழைத்துப் போர் செய். நான் ஒளிந்திருந்து அம்பு எய்தி அவனை வீழ்த்தி விடுகிறேன் என்று . . . .சே, இந்த ராமாயண வாலிவதைப்படல வசனத்திற்கு இங்கே என்ன வேலை . . . . நீ நாளைக்கே திமுக அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரு. நான் தீர்ப்பு வழங்கி அந்த அரசைக் கலைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று உணர்ச்சிபூர்வமாகக் கொந்தளித்திருப்பது நீதித்துறையின் நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் பெப்பே காட்டிய கர்நாடக கேரள அரசுகள் மீது பாயாமல் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது திடீரென்று கும்பகர்ணத் துயில் கலைந்திருக்கும் விந்தை வியக்க வைக்கிறது. கம்பன் எழுதிய பாடல் வரிகள் இப்போது தமிழனின் தூக்கத்துக்குத் தான் பொருந்தி வரும் போலும்: "உறங்குகின்ற கும்பகர்ண, உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்ற தின்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்; கரங்கு போல விற்பிடித்த காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் இனிக் கிடந்துறங்குவாய்"

No comments: