Tuesday, September 11, 2007

தெற்கே துரத்தப்பட்டோர் ஆரியரா? திராவிடரா? - II

பேராசிரியர் இரா.மதிவாணன


இந்திரனின் ஆட்டமும் ஓட்டமும்:


ஆப்கானித்தானத்தில் புகுந்தபோது புதிய ஆரியர்கள் மேய்ச்சல் நிலம் தேடினர். காபூல் ஆற்றைக் கடந்ததும் உள்நாட்டு அரசர்களுக்குள் சிண்டு முடிந்து உட்பகை வளர்த்து ஆதாயம் பெற்றனர். கால்நடைகளைக் கவர்ந்தும் தீயிட்டுக் கொள்ளையடித்தும் கொரில்லாப் போர் கொள்ளைக்காரர்களாக மாறினர். இந்நிகழ்ச்சி களை இருக்குவேதப் பாடல்களின் வாயிலாகக் குருவிக் கரம்பை வேலு தன் நூல்களில் விளக்கியுள்ளார்.

"காபூல் ஆறு. ரசா ஆறு, குருமு ஆறு ஆகியவை தடுத்து உங்களை வடக்கு நோக்கி அனுப்பாமலிருக்கட்டும்'' என இருக்கு வேதத்தில் ஆத்திரேயன் பாடியிருக்கிறான். கி.மு. 1300 - கி.மு. 1200 கால எல்லையில் பிற்காலச் சிந்துவெளியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்தவர் வத்தன் என்னும் தமிழ் மன்னன் இவன் பெயரை விருத்திரன் என ஆரியர் மாற்றிக் கொண்டனர்.

"அதோ! கருத்த விருந்திரன் வருகிறான். அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்று, காப்பாற்று. புவி முழுவதும் எங்கு பார்த்தாலும் இவர்களே பரவி யிருக்கிறார்கள். தற்போது போர் நடக்கிறது. எங்கள் குதிரைகளையும் மாடுகளையும் காப்பாற்று.

தங்களை உயர்ந்தவர்களாக நினைத் துக் கொண்டிருக்கும் கருப்பு நிறத்தவர்களைத் தாழ்த்தி ஆரியர்களை உயர்த்த வேண்டும்'' என இருக்கு வேதம் (6-19-12) புலம்புகிறது. வத்தவனோடு ஒன்பது மாதம் போரிட்ட சக்கரனுடன் இந்திரன் கூலிப் படையாகச் சேர்ந்து கொண்டு இரவில் அணைகளை உடைத்துப் பெருகிய வெள்ளத்தில் வத்தவனோடு அவன் குடும்பத்தாரை நீரில் மூழ்கிப் போகச் செய்தான்.

வத்தனின் அடுத்த மூன்று தலைமுறையினர் தொடர்ந்து ஆரியர்களை அலறத் தாக்கிய செய்தி இருக்கு வேதத்தில் உள்ளது.அரப்பாவிலிருந்த சாம்பன் என்னும் சம்பரன் கோட்டைகளைத் தகர்க்க மேலும் தெற்கு நோக்கி இந்திரனின் கூட்டம் ஓட்டம் எடுத்தது. சம்பரனின் பழம்பகைவன் திவோதாச னொடு கூலிப்படையாக இந்திரன் சேர்ந்து கொண்டான். அதன்பிறகு அரசனானன் அரப்பாவில் ஆட்சி புரிந்தான்.

இவன் பெயரை வரசினன் என்று இருக்கு வேதம் குறிப்பிடுகிறது. இருக்குவேதம் சிந்து வெளியில் அனைவரையும் வென்றதாகக் கூறுகிறது.அப்படியானால் பெரு வெற்றி பெற்ற ஆரியர்கள் அங்கிருந்து கங்கைச் சமவெளிக்கு ஓடி வந்தது ஏன் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.தோற்ற தமிழினத்தார் மீண்டும் மீண்டும் எரித்துப் போரிட்டதைத் தாங்க முடியாமல் ஆரியர்கள் யமுனைச் சமவெளிக்கும் கங்கைச் சமவெளிக்கும் ஓடத் தொடங்கினர்.

இந்திரன் தலைமையில் தீயிட் டுக் கொள்ளையடிக்கும் ஆரியர் சூழ்ச்சி முடிவடைந்தது.கங்கைச் சமவெளியில் கோட்டை தகர்ப்பது அணைகளை உடைப்பது போன்ற செயல்களில் ஆரியர் ஈடுபடவில்லை. அதற்கு மாற்றாக அரசர்களிடம் இணக்கமாகப் பழகி வேள்விகளைப் பெருமளவில் செய்து செல்வ வாழ்க்கை வாழத் தொடங்கினர்.

உழைக்காமல் வாழ் வதற்கு வேள்விகள் துணை புரிந்தன.சமண சமயம் கி.மு. 1200 அளவில் செல்வாக்கு பெற்ற போது வேள்வி செய்வதற்குக் கடும் எதிர்ப்பு தோன்றியது. அப்போது மகத நாடு வரையில் பரவினார்கள். மீண்டும் பௌத்த மதமும் வேள்விகளை எதிர்த்ததால் வேறு வழியின்றி விந்திய மலையைக் கடந்து தெற்கு நோக்கி ஓட்டம் எடுத்தார்கள்.

கலிங்கத்தில் அசோகன் ஆண்டபோது ஒரிசாவிலிருந்து ஆந்திரத்துக்கு வந்தனர். ஆந்திர நாட்டு அமராவதியில் ஆட்சி புரிந்த இச்சுவாகு மரபினர் பௌத்த மதம் தழுவினர்.அங்கும் இருக்க முடியாத நிலையில் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்துக்கும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கேரள கரு நாடக பகுதிகளுக்கும் ஆரியர்கள் விரட்டியடிக்கப் பட்டனர்.

வேள்வி செய்வதை மட்டும் நம்பி வாழ முடியாத நிலையில் கோயில்களைக் கட்டுமாறும் பார்ப்பனர்க்குச் சதுர்வேதி மங்கலங்களை அளிக்குமாறும் மன்னர்களை மனம் மாற்றி நிலையான வாழ்வுக்கு வழி வகை செய்து கொண்டனர்.மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கங்கைக் கரையிலிருந்த காமகோடி என்னும் இடத்திலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்களே கும்பகோணத்திலும் காஞ்சி புரத்திலும் சங்கரமடம் அமைத்துக் கொண்டனர் என்பதும் ஆரியர்கள் படிப்படியாகத் தெற்கு நோக்கி வந்ததை உறுதிப்படுத்துகிறது.

விராத்திய வேளாப்பார்ப்பனரையும் சேர்த்துக் கொண்டதால் ஆரிய இந்திரராகிய பிராமணர் மக்கள் தொகை மூன்று விழுக்காடாக உள்ளது.இந்நிலையில் இவர்களை எந்த மண்ணின் மைந்தர் என்று எவரும் கணிக்க முடியாது.


வேள்விகளை ஏன் எதிர்த்தார்கள்?:

இந்திய நாட்டுப்புற மக்கள் அன்பானவர்கள், புதியவர்களை விருந்தோம்பி மகிழ்பவர்கள். ஆரியர் செய்த வேள்விகளை ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கு இந்திய வரலாற்று ஆசிரியர்கள் ஒருவராவது தக்க காரணம் காட்டவில்லை.

இந்திய மக்கள் மாடு களைத்தாய் போன்று கருதியவர்கள். எந்த விலங் கைத் தெய்வத்திற்குப் பலி கொடுத்தாலும் மாடு வெட்டிப் பலி தரும் வழக்கம் மாட்டின்புலால் உண்பவர்களிடம் கூட இருந்ததில்லை.ஆரியர்கள் ஆயிரக்கணக்கான ஆடுமாடுகளை மூன்று மாத ஆறுமாத வேள்விகளில் தொடர்ந்து நெருப்பிலிட்டுத் தின்றனர்.

அரசர்களே வேள்விக்கு உடந்தையாக இருந்ததால் தன் கால்நடைகளை வேள்விக்குத் தரவேண்டிய கட்டாயத்துக்குச் சிற்றூர் மக்கள் உள்ளாயினர். அரசனையும் எதிர்த்து வேள்வி களைத் தடுத்த பொது மக்களுக்கு வேள்வி தடுக்கும் அரக்கர்கள். என வேதங்கள் பெயர் சூட்டின.

முப்பதுக்கும் மேற்பட்ட இராமாயணங்களுள் ஒன்று சீதை இராமனுக்குக் கூறிய அறிவுரையைக் குறிப்பிடுகிறது."இராமா, நீ இந்த முனி வர்களின் பேச்சை நம்பி வேள்விக் காவலுக்கும் போகாதே. பொதுமக்கள் வேள்விகளைத் தடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.கால் நடைகளை உயிராகக் கருதுகிறார்கள். ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம்? என்றும் சீதையின் அறிவுரை கவனிக்கத்தக்கது.

அரசர்களின் பாதுகாப்பு இருந்தாலும், பொதுமக் களின் எதிர்ப்பு வலுத்தது. சமண பௌத்த சமயங்களும் வேள்விகளை எதிர்த்தன.ஆரியர் வேள்வி செய்ய அஞ்சினர். விந்தியமலையைத் தாண்டித் தெற்கே ஓட்டம் எடுத்தனர். வேள்வியில் உயிர்க்கொலையை நிறுத்தி உணவுப் பண்டங்களைச் சொரியத் தொடங் கியபோது தென்னாட்டு மூவேந்தர்களையும் வேள்விக்கு இணங்கச் செய்தனர்.அதுவும் பிசுபிசுத்தது.

கோட்டை கட்டி வாழ்ந்த மன்னர்களைக் கோயில் கட்ட வைக்கும் சூழ்ச்சியில் ஆரியர் வெற்றி பெற்றனர்.அன்று முதல் காபூலிலிருந்து குமரிமுனை வரை விரட்டப்பட்டு, தெற்கு நோக்கி ஓடிவந்த ஆரியர்களின் தொடரோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.சமயத் தலைமையும் சமற்கிருத மந்திரங்களும் சமயத்தில் உதவும் சஞ்சீவி மருந்துகளாயின.


ஆரியர் ஓடிவந்த பாதையில் மாற்றிக் கொண்ட தொழில்கள்:


கைபர் கணவாயைக் (கி.மு. 1300) கடந்தபோது குதிரைகளையும் மாடுகளையும் மேய்ப்பது ஆரியரின் முதல் தொழிலாக இருந்தது. சிந்துவெளியில் நன்செய் வேளாண்மைத் தொழில் பெருகியிருந்ததால் மேய்ச்சல் நிலம் கிடைக்கவில்லை. நீர்ப்பாசனத்தைத் தடுக்க அணைகளை உடைப்பது இரண்டாவது தொழிலாயிற்று

கால்நடைகளைக் களவாடுவது மூன்றாவது தொழில்.

உள்நாட்டுத் தமிழரசர்களின் உட்பூசலில் ஒருசாரார்க்கு உதவும் குதிரைக் கூலிப்படையாக மாறி பொழுது விடியும் கொள்ளையடித்து ஓடுவது நான்காவது தொழில்.

சிந்துவெளியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் நடு இந்தியாவில் குடியேறி வேள்வி செய்வதை ஐந்தாம் தெழிலாகக் கொண்டனர்.

யமுனைப் பகுதியில் வாழ்ந்த பாண்டிய அரசர்களான நார்மாறனும் பல் பூதனும் ஆரியர்க்குக் கால்நடைகளும் பொன்னும் வழங்கிய செய்தி இருக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

வேள்வி செய்ய எதிர்ப்பு வலுத்தபோது கங்கைச் சமவெளி நோக்கி ஓடி வந்தனர். தமிழர் தெய்வங்களைத் தம் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டு உபநிடதத் தொகுப்புக்கு மாறியது ஆறாவது தொழிலாயிற்று.

"பவதி பிட்சாம் தேகி'' எனக் கூசாமல் பிச்சையெடுத்தது ஏழாம் தொழிலாயிற்று. கோட்டை கட்டும் அரசர்களைக் கோயில் கட்டும் அரசர்களாக மாற்றி நிலையான வருமானம் தேடிக் கொண்டது எட்டாம் தொழிலாயிற்று.

சமற்கிருதக் கல்லூரிகளைத் தொடங்கி, தமிழிலும் பாலிபிராகிருத நூல்களிலும் இருந்த வான்நூல் கணிதம் மருத்தும், மெய்ப் பொருள் ஆகிய எண்ணிறந்த நூல்களைச் சமற்கிருதத்தால் மொழி பெயர்த்துக் கொண்டு மூல நூல்களை அழிக்கும் அழிப்புத் தொழில் மேற்கொண்டது ஒன்பதாம் தொழிலாயிற்று.

சமய ஊடகங்கள் வாயிலாக இடப்பெயர் இயற்பெயர் கலைச்சொல் ஆட்சிச்சொல் என அனைத்தையும் சமற்கிருத மயமாக்கி உள்நாட்டு மொழிகளுக்குச் சமற்கிருத எழுத்திலக்கணம் வகுத்து மண்ணின் மொழிகளை மண்ணாக்க முயன்றது பத்தாம் தொழிலாயிற்று.

செய்தி ஊடகங்களைத் தம் கையில் வைத்துக் கொண்டு இந்திய வரலாற்றை வேதகாலத்தில் தொடங்குவது பதினொன்றாம் தொழிலாயிற்று.

ஆரியர்கள் தம் தொழில்களை மாற்றிக் கொண்டாலும், வரலாற்றை மாற்ற முடியாது. `வாய்மையே வெல்லும்' என்பது உண்மை.

No comments: