Monday, September 17, 2007

அவர்களுக்கு முக்கியம் மதமே - மக்கள் அல்ல!

அவர்களுக்கு முக்கியம் மதமே - மக்கள் அல்ல!

மக்கள் வளர்ச்சியோ, நாட்டு வளர்ச்சியோ மதங்களுக்கு முக்கியம் அல்ல - வெறும் மூடத்தனமான நம்பிக்கைதான் மதங்களுக்கு உயிர் என்பதற்கு நீண்ட ஆய்வுகள் தேவைப்படாது. நாட்டில் இப்பொழுது சர்ச்சைக்கு ஆட்படுத்தப்படும் ராமன் பாலம் ஒன்றே இதற்குப் போதுமான எடுத்துக்காட்டாகும்.

சேது சமுத்திரத் திட்டத்தால் தொழில்கள் வளரும், வேலை வாய்ப்புக் கிட்டும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பது திட்டவட்டமாக தெரிந்த நிலையில், அதனை வரவேற்க மனம் வரவில்லை என்றால், அவர்கள் யாராகயிருந்தாலும் மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்தானே! துரோகிகள் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சென்னை - புல்லாரெட்டி அவின்யூ பொதுக்கூட்டத்தில் சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்?

துரோகிகளைத் துரோகிகள் என்று சொல்லாமல், தூய்மையானவர்கள் என்றா ஏற்றிக் கூற முடியும்?

ராமன் என்ற ஒருவன் இருந்ததாகவே இருக்கட்டும்; பாலம் கட்டியதாகவே கூட வைத்துக் கொள்வோம்;அதுதான் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறதே - அதனால் மக்களுக்குத் துரும்பு முனையள வாவது பயன் உண்டா? மக்கள் நலன் முக்கியமா - மூடத்தனமான நம்பிக்கைகள் முக்கியமா?

மூடநம்பிக்கை தான் முக்கியமென்றால், எந்த ஒரு அரசும் செயல்பட முடியாதே! காலை ஊன்றி பூமியில் நடக்கக் கூட முடியாதே - காரணம் பூமியல்லவே - அது பூமாதேவியாயிற்றே! தண்ணீரைக் கழிவறைகளில் பயன்படுத்த முடியாதே - அது தண்ணீர் அல்ல - கங்காதேவியாயிற்றே!

உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லுகிறார்கள். உச்சநீதி மன்றமும் ஒரு மூடத்தனமான முரட்டு முயற்சிக்குச் செவி சாய்த்து இடைக்காலத் தடையும் கொடுக்கிறது என்றால், இது நாடா - காடா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

நீதிமன்றம் என்பது ஆதாரங்களைப் பார்க்கவேண்டும் - அறிவியல் ரீதியான சாட்சியங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர, மூடத்தனமான நம்பிக்கைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு நீதிமன்ற நேரத்தைப் பாழடிக்கக் கூடாது!

விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுவது, இந்தியாவின் மிக உயர்ந்த அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றத்திற்கு மட்டும் பொருந்தவே பொருந்தாதா?

மத்திய தொல்லியல் ஆய்வுத் துறையும், அகமதாபாத்தில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நீர் வள ஆய்வு மையமும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளில் பட்டுத் தெறித்ததுபோல அறிவியல் உண்மைகளை அறிக்கை களாகக் கொடுத்துள்ளனர்.

ராமன் பாலம் என்பது செயற்கையானதல்ல - எந்த மனித னாலும் உருவாக்கப்பட்டதல்ல - கடல் அலைகளின் தாக்கத்தாலும், நீரோட்டத்தாலும் இயற்கையில் ஏற்பட்டது என்பதைத் திட்டவட்டமாகவே தெரிவித்துவிட்டனர்.
இன்னும் ஒருபடி மேலேயும் சென்று இராமன், இராவணன் என்கிற பாத்திரங்கள் எல்லாம் புராணக் கற்பனைகளே தவிர, வரலாற்று மாந்தர்கள் அல்லர் என்றும் அடித்துக் கூறிவிட்டனர். (இதனைப் பின்வாங்கிக் கொள்ளச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அறிவார்ந்தவையல்ல).

சங் பரிவார்க் கூட்டத்துக்கு முன் புத்தியில்லை என்பது இதன்மூலம் தெளிவாகி விட்டது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததுபோல் ஆகிவிட்டது. நீதிமன்றம் செல்லப் போய், ஆதாரப்பூர்வமாக இராமாயணம் என்பதெல்லாம் சுத்தப் புரட்டு என்று உச்சநீதிமன்றத்திலேயே பதிவு செய்யப்படும் நிலைக்குத் தள்ளியவர்கள் அவர்கள்தானே?

இந்த நிலையில், அறிவியல் பூர்வமாக அறிக்கை கொடுத்த அமைப்புகள் மீது காவிக் கூட்டம் (அத்வானி முதல்) தம் பாசிச தாக்குதலைத் தொடுத்துள்ளது. அந்தக் கூட்டத்தோடு நம்மூர் செல்வி ஜெயலலிதாவும் பங்கு கொண்டு தன்னிறத்தைக் காட்டிக் கொண்டு விட்டார். அவரிடம் உள்ளுக்குள் உறங்கும் இந்துத்துவா உணர்வை எழுப்பித் தொலைத்துவிட்டார். ராமன் பாலத்தில் கை வைக்காதே என்று குரல் கொடுக்கிறார். அதுவும் நன்மைக்கே! இந்தக் கூட்டம் மக்கள் நலனுக்குப் பயன்படாத ஒன்று. மவுடீகத்தில் மூழ்கி, மாயா உலகத்தில் சஞ்சரித்து, உண்மை மனித வாழ்வின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் பிற்போக்குக் கும்பல் என்பதை நாடு உணரக் கூடிய ஒரு வாய்ப்பு இதன்மூலம் ஏற்பட்டுவிட்டது; கெட்டதிலும் கிடைத்த ஒரு நன்மையாகவே இதனைக் கருத வேண்டும்.
மக்களை அவர்கள் இனி சந்திக்கவேண்டாம் - காட்டுப் பகுதிக்குள் சென்று கமண்டலத்தைக் கையில் ஏந்தி கடவுள்களை நேரில் காண்பதற்கான முயற்சியில் மூழ்கிக் கிடக்கட்டும்!

`கடவுளை மற மனிதனை நினை! என்றார் தந்தை பெரியார்.

இவர்களோ `மனிதனை மற - கடவுளை நினை என்கின்றனர் - மக்கள் அடையாளம் காண்பார்களாக!

No comments: