Monday, September 17, 2007

சோவும் ஜெயலலிதாவும்

கேள்வி: மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மத மாற்ற தடை சட்டம், வேலை நியமன தடைச் சட்டம் உட்பட பல தடைச் சட்டங்களை ஜெயலலிதா கொண்டு வருவார் என்று முதலமைச்சர் கருணாநிதி பட்டியிலே வெளியிட்டுள்ளாரே இதுபற்றி?

பதில்: ஜெயலலிதாவிற்கு அவருடைய நிர்வாகம் பற்றி, இதைவிட ஒரு நல்ல சர்டிஃபிகேட் தேவையில்லை. (`துக்ளக் 19.9.2007 கேள்வி - பதில் பகுதி).

ஜெயலலிதாவுக்கும் `சோ ராமசாமிக்கும் இடையே உள்ள பாலம் பார்ப்பனப் பாசம் மட்டுமல்ல - அதற்கு மேலாக `இந்துத்துவா மனப்பான்மை உள்ளது என்பதற்கு இந்தப் பதில் ஒன்று போதாதா?

மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்ததற்குப் பச்சையான ஓர் ஆர்.எஸ்.எஸ்.தானே பச்சைக் கொடியைக் காட்ட முடியும்?

வேலை நியமனத் தடை சட்டம் ஜெயலலிதா கொண்டு வந்ததையும் வரவேற்கிறார் திருவாளர் `சோ
தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் முதல் தலைமுறையாகப் படித்து விட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும்போது வேலை நியமனத் தடை சட்டத்தைக் கொண்டு வந்தால் அக்கிரகாரத்துக்கு ஆனந்தப் பைரவியாகத்தானேயிருக்கும்?

டி.வி.எஸ். சேஷசாயி சிம்சன் போன்று பூணூலைத் தடவிப் பார்த்து பார்ப்பனர்களை உள்ளே இழுத்துக் கொள்ள ஆந்திர முதலாளிகள் எங்கேயிருக்கிறார்கள்?

அப்படியே `சூத்திர முதலாளிகள் யிருந்தாலும் அவர்களின் காதலும் அக்கிரகாரவாசிகள்மீது தானே?

அந்தத் தைரியத்தில்தான் வேலை நியமனத் கிடை சட்டத்தை வரவேற்கிறார் `சோ பார்ப்பனர். நம் நாட்டு இளைஞர் பட்டாளத்துக்கு எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்று இன்னமும் தெரியவில்லையே, என்ன செய்ய!

வி.பி. சிங் ஆட்சிக் காலத்தில் முதன் முதலாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் அதனை எதிர்த்து வழக்கு மன்றம் சென்றனர். நடைமுறைக்கு வர இரண்டு ஆண்டு காலம் மேலும் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆந்திர மாநிலத்திலிருந்து ராஜசேகர ஆசாரி என்ற பிற்படுத்தப்பட்டவருக்கு முதல் வேலை வாய்ப்பை அளித்தார் அன்றைய சமூக நலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி.

மேலும் வாய்ப்புக் கிட்டும் என்ற நிலையில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிஜேபி என்ன செய்தது தெரியுமா? மத்திய அரசு அலுவலர்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தனர் - விளைவு ஏற்கெனவே மத்திய அரசு அலுவலகங்களை ஆக்ரமித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் வயிற்றில் பால் பாயாசம் வார்க்கப்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகள் அலுவலக மின் விசிறியில் சிண்டைத் தட்டி விட்டு உலர்த்திக் கொண்டு இருந்தனர். அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்தார்கள் தெரியுமா?

வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்தனர். ஒரு வழியாக மண்டல் குழு பரிந்துரைகளை ஏற்று சமூக நீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் பிறப்பித்த ஆணையை உயிரோடு வைத்துக் கொளுத்தினார்கள்.

தமிழ்நாட்டில் செல்வி ஜெயலலிதாவும் அதனைச் செய்தார். அதனை வரவேற்று பீதாம்பரம் குஞ்சம் கட்டி
வாழ்த்துப்பா படிக்கிறார் திருவாளர் `சோ.

தமிழர்கள் இக்கூட்டத்தை முழுமையாக அடையாளம் காணப் போவது - எப்போது?

- கருஞ்சட்டை

நன்றி- விடுதலை.

No comments: