Monday, September 17, 2007

செட்டை முளைத்த தமிழெதிரி ஈசல்களின் சேது வாதம், தமிழ்நாட்டின் மீது பாய்கிறது குரங்குப்படை

தேடுவாரற்றுக் கிடந்த இராமர் அணை (பாலம்) என அழைக்கப்படும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் தொடர்ச்சியாகக் கிடக்கும் மணல் திட்டுக்களின் மீது, கடந்த சில வாரங்களாக தமிழெதிரிகளுக்கெல்லாம், அதிலும் தமிழ்நாட்டில் தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே தமிழர்களின் முதுகில் குத்தும் தமிழெதிரிகளுக்கெல்லாம் அளவு கடந்த பக்திப்பரவசமுண்டாகி அது பாம்பன் கடலலையை விட வேகமாக வீசத் தொடங்கி விட்டது.

இதற்கு என்ன காரணமாக இருக்கலாமென இளிச்சவாய்த் தமிழர்கள் தம்மைத் தாமே கேட்கவேண்டிய நேரம் வந்து விட்டது. முதலில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனக் கனவு கண்டவர்கள் தமிழர்கள், இந்த சேதுக்கடலை விரிவாக்கும் திட்டத்தைத் தொடங்கித் தமிழ்நாட்டின் வரண்ட தென்மாவட்டங்களுக்கும் வேலைவாய்ப்பளிக்க வேண்டும், அவற்றையும் முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமென்பதற்காக அறிஞர் அண்ணா முதலமைச்சராகவிருந்த போதே வேண்டுகோளை விடுத்தார் ஆனால் அக்காலத்தில் இந்திய மத்திய அரசில் தமிழ்நாட்டின் குரலுக்கு அந்தளவு மரியாதை இருந்ததில்லை. சிதைவடையாத வட இந்திய வாக்குக்கள் மட்டுமே காங்கிரசுக்கு அரசாங்கத்தை அமைக்கப் போதுமானதாக இருந்தது, அதனால் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு எப்பொழுதும் நியாயமான தீர்ப்புக்கள் கிடைத்ததில்லை. அதனால் அன்றைய மத்திய அரசாங்கங்கள் தமிழ்நாட்டின் சேதுத் திட்டக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

இன்று சேதுத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்துத்துவாப் படைகளின் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் செல்வாக்குடனிருந்த திரு. வைகோ அவர்களாலும், அவ்வாட்சியில் அங்கம் வகித்த திமுகவின் அயராத உழைப்பினாலும் சேதுசமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. இன்று சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் பரிவாரங்களும், பண்டாரங்களும் அன்று ஏன் அனுமதியும், நிதியும் ஒதுக்கினார்கள் என்பது அந்த அனுமானுக்குத் தான் வெளிச்சம்.

தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தாக்கப்படும், எதிர்க்கப்படும் ஒரே அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதியாகத் தானிருக்க வேண்டும், பார்ப்பனப் பெண் பதவியிலிருக்கும் போது, அவர் செய்யும் அத்தனை அநியாயங்களையும் நியாயப்படுத்தும் தமிழ்நாட்டுத் தமிழெதிரி ஒட்டுண்ணிகள் எல்லாம், கருணாநிதியின் ஆட்சியில் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டு அவரை விமர்சிப்பதற்கும், விழுத்துவதற்கும் காத்திருப்பதும், அவர் தனது ஒவ்வொரு அடியையும் அவதானமாக எடுத்து வைக்க வேண்டிய நிலையில் இருப்பதும் ஈழத்தமிழர்களுக்கே புரியும்.

அவருடைய நிலை ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்ற மாதிரித் தான், உதாரணமாக கலைஞர் கருணாநிதி வெளிப்படையாக ஈழவிடுதலைக்கு ஆதரவு தெரிவித்தால் தமிழ்நாட்டுத் தமிழெதிரிகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் அவரைப் பயங்கரவாதியாகவும், இந்திய எதிரியாகவும் சித்தரிக்கத் தொடங்கி விடுவார்கள், அவர் ஈழவிடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காது விட்டால் நாங்கள் ஈழத்தமிழர்களனைவரும் அவரைத் தமிழ்த் துரோகியாக்கி விடுவோம். அவருக்கு இது இக்கட்டான நிலை தான்.

அதே போல் இந்த சேதுசமுத்திரத் திட்டம் ஜெயலலிதாவினால் தொடங்கப்பட்டிருந்தால் சங்கராச்சாரிக் காவிகளும், தமிழெதிரி ஒட்டுண்ணிகளும், ஈழத்தமிழர்கள் முதுகில் குத்திக் கொண்டு சிங்களவர்களின் காலை நக்கும் சுவாமிகளும், இந்து ராம்களும், மணிசங்கரன்களும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்களா என்பதைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று இவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பதற்குத் திரண்டெழுவதற்குக் காரணம் அதை ஆதரிப்பவர்கள் திராவிடக் கட்சிகள், திராவிடத் தமிழர்கள், பெரியாரின் சீடர்கள் என்பதால் மட்டும் தான்.

இதற்கு முன்னால் இலங்கையின் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கா கூட இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாரிய பாலத்தைக் கட்ட வேண்டுமென்று கூறினார் அதற்குப் பிரதமர் வாஜ்பாய் மட்டுமல்ல இந்து ராமும், சோ ராமசாமி கூட ஆதரவு தெரிவித்தார்கள், அந்தப் பாலம் அமைப்பதற்கும் இப்பொழுதுள்ள இராமர் பாலம் எனப்படும் மணல் திட்டுக்களை விசைவெடி (டைனமைட்)களால் தகர்த்துத் தான் கட்டியிருக்க வேண்டும், ஆனால் சிங்களவர்களின் அந்தக் கோரிக்கைக்குப் இந்துப் பரிவாரங்களிடமிருந்தும், இந்து ராமிடமிருந்தும், சோ ராமசாமிகளிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும், தமிழெதிரிகளிடமிருந்தும் ஆதரவு கிடைத்தது, ஏனென்றால் அந்தக் கோரிக்கையை வைத்தது வேறு யாருமல்ல தமிழெதிரிச் சிங்களவர். ஆனால் இந்தியர்களை வெறுக்கும் ஏனைய சிங்களக் கட்சிகளிடமிருந்து, பாலம் கட்டினால் இந்தியக் கூலிகளால் இலங்கை நிரம்பி விடுமெனப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

அதனால் சிங்களவர்களால், தமிழெதிரிகளால், தமிழர்களல்லாதவர்களால் இராமர் பாலம் தகர்க்கப்பட்டால் இராமர் கோபித்துக் கொள்ள மாட்டார், இராமர் அணையின் புனிதத்துவமும் கெடாது போலிருக்கிறது? இந்த தமிழெதிரிக்குரங்குப் படைகளின் இரட்டை வேடத்தைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களால் உலகத்தமிழர்கள் ஒன்று படுவதை மட்டுமல்ல, தமிழ்நாடும், திராவிடக்கட்சி அரசுகள் பலம் பெறுவதையும், தமிழ்நாட்டு மக்கள் பொருளாதாரத்தில் வளம் பெறுவதையும் கூடத் தாங்கிக் கொள்ள முடியாது. இலங்கையில் சிங்களவர்களும் சிங்களப் பத்திரிகைகளும் சுப்பிரமணியம் சுவாமியின் சேது சமுத்திர எதிர்ப்புக்காகப் பாராட்டிப் போற்றுகிறார்கள், அந்த சுப்பிரமணியம் சுவாமிக்கு வெற்றி கிடைப்பதற்காக சங்கராச்சாரியார் யாகம் நடத்துகிறார், அதை வாழ்த்தி இந்து பத்திரிகை பத்தி பத்தியாக எழுதுகிறது, சேது சமுத்திரத்திட்டத்தால் சூழமைவுக்குப் பாதிப்பு ஏற்படுமென இலங்கை அரசிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் மானியம் பெற்ற இலங்கை இந்திய "விஞ்ஞானிகள்" எழுதித் தள்ளுகிறார்கள்.

பிரான்சுக்கும் பிரித்தானியத் தீவுக்குமிடையில் பாரியளவில், பெருமளவு செலவில் கட்டப்பட்ட 51 கிலோ மீற்றர் நீளமான தொடரூந்து சுரங்கப் பாதையைக் கட்டுவதற்குக் கோடானு கோடிக்கணக்கான தொன், கடல் மண்ணைப் பல பாரிய இயந்திரங்களைப் பாவித்துத் தோண்டிய போது கூட இந்தளவுக்குச் சூழமைவுக்குப் பாதிப்பு ஏற்படுமென விஞ்ஞானிகள் கூறாத போது, அப்படி எந்தவித பெரிய பாதிப்பும் சூழமைவுக்கு ஏற்படாததை நாமே கண்கூடாகப் பார்க்கும் போது, சேது சமுத்திரத் திட்டத்தில் சிறியளவு, குறிப்பிட்ட அகலத்துக்குக் கடலை ஆழமாக்குவதால் மட்டும் சூழமைவுக்குப் பாரிய பாதிப்பு ஏற்படுமெனப் பூச்சாண்டி காட்டுபவர்களும், அவற்றை இணையக் களங்களில் பதிப்பவர்களும் யாரென்பதையும், அவர்களின் நடவடிக்கைகளையும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரிகள் தமிழர்களின் மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அது தான் தமிழினத்தின் சாபக்கேடு. நெஞ்சு பொறுக்குதில்லையே!

No comments: