Thursday, August 30, 2007

தமிழ் மந்திரங்க ளென்பது என்றுமில்லை

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை



தமிழ் மந்திரங்க ளென்பது என்றுமில்லை. அவை அந்நவீனரின் கற்பனையே. அவற்றைத் தமிழகச் சைவாலயங்களில் ஓதவே கூடாது. அவ்வோதுகை சைவசமயத்துக்கு முற்றிலும் புறம்பானது. அங்கு வேதாகமோக்த சம்ஸ்கிருத மந்திரங்களே ஓதத் தகுவன. அவற்றையே அன்றே போல், இன்றே போல், என்றும் ஓதிவர வேண்டும். அதுவே சைவ நலம். இவ்விஷய நிரூபணமே இப்புத்தகம். இன்ன எதிர்ப்புக்கள் இன்னுமிருக்கலாம். அவை அந்நவீனரை உறுத்துகின்றனபோலும். ஆயினும் அவர் கொண்டது விடார். தம் கொள்கையைச் சிறிதாவது பலிதமாக்க வேண்டும்: அவர் துடிப் பது. என்னை? தமிழர்ச்சனையை விரும்புவார் ஆங்காங்குளர். அவருக்காகத் தனிப்பட்ட முறையிலாவது அவ்வர்ச்சனையே நடத்தவேண்டும். அவ்வேற்பாடவசியம்: இப்படிச் சொல்கிறாரவர். சைவாலயங்கள் பரார்த்த பூசா நிலயங்கள். அங்குள்ள பூசைகளுக்கு விதிநூல் சிவாகமங்கள். அங்கு வழிபட வருகிறவர் எவரேனுமாக, அவர் விதிநூலுக் கடங்கியே விரும்பவேண்டும். அதற்கு மேல் விரும்ப அவருக்குரிமையில்லை. விதியைக் கடந்த தனிப்பட்ட விருப்பம் இலெளகிகங்களிற்றானுஞ் செல்லாது. இலெளகிக விதிகளே அதை மட்டந் தட்டிவிடும்.சைவாலயங்களில் அக்கிரமங்கள் மலிந்து விட்டன, அவற்றை யொழிக்கவேண்டும்: அந்நவீனர் கதற லது. அக்கிரமங்களை யெடுத்துப் பேசலாம். அது திறமையன்று. கிரமங்கள் எவை? அவற்றைப் பிரமாண சகிதம் அவர் வெளியிடுக. அவ்வக்கிரமங்கள் தாமே போய்விடும். ஆனால் கிரமப்பிரசாரங்கள் அவர் திருக்கூட்டத்தில் எவரிடமுமே கிடையா. ஏன்? கிரமங்கள் சிவாகம விஷயம். சிவாகமப் பயிற்சி அவரிடம் சூனியம். அன்றியும் சைவாலய நிர்மாணம், பிரதிஷ்டை, உத்ஸவம், அர்ச்சனை முதலியவெல்லாம் சிவாகம விதிப்படி நடப்பன. அ·தாவது அவ்வாலயங்களைச் சிவாகமங்களே ஆட்சி செய்கின்றன என்பது. சைவாதீனங்களிலும் அவ்வாட்சிதானுள்ளது. அந்நவீனர் அவ்வாலயங்களாதியவற்றை அவ்வாட்சியிலிருந்து பறிமுதல் செய்ய பார்க்கின்றனர். நாயகனிடமிருந்து நாயகி வஞ்சனையாற் பிரிக்கப்பட்டாள். பிறகு அவளுக்கு ஆதரவாவார் யாருமிலர். அவள் கதி யென்ன? வல்லவருக்கெல்லாம் அவள் ஆடபடுவாள். அவ்வளவு தான். அந்நவீனரும் அப்பறிமுதல் செய்ய முயல்வதன் மூலம் அச்சைவ நிலயங்களை அந்நாயகிபோலாக்கி வருகின்றனர். அதனால் அவற்றில் எத்தனைபேர் எத்தனை புதுமைகளைப் புகுத்தினர்? அவருள் எவருக்காவது சைவம் சமயமாயிருந்ததா? சிவாகமங்களில் கெளரவ புத்தி யிருந்ததா? அவை சைவசமய தெய்வ விதி நூல்க ளென்ற பிரக்ஞை தானு மிருந்ததா? சைவ சமூகத்துக்கும் அந்நினைவு போக்கப்பட்டது. அதனாலன்றோ 'கோயில்களில் ஹரிஜனங்களை சாதாரண வேலையாட்களாகவும் சமையற்காரர்களாகவும் அர்ச்சகர்களாகவும் நியமிக்கும் பிரச்னை சர்க்காரின் தீவிர பரிசீலனையில் இருந்துவருவதாக ஹிந்துமத தர்ம பரிபாலன மந்திரி ஸ்ரீ பி.பரமேஸ்வரன் கூறினார்' என்ற செய்தியும் வரலாயிற்று. அதை 6-5-1954 'தினமணி' யிற் காண்க. சைவசமயம் சிவாகமங்களைப் பரமசிவ வாக்கென்னும் அச்சமயத்துக்கு அவற்றில் விதிக்கப்பட்டனவே தருமங்கள். விலக்கப்பட்டனவே அதருமங்கள். எல்லாச் சமயிகளுக்கும் போல் சைவ சமயிகளுக்கும் அச்சைவ தருமாசரணையிற் பாதுகாப்பளிப்பதே அரசுக்குக் கடன். அப்பாதுகாப்பே பரிபாலனம். அப்பத்திரிகையிற் கண்ட விஷயம் பரிபாலன மன்று. அத்தருமங்களையே மாற்றியமைப்பதாம், அரசுக்கு அவ்வுரிமை யுண்டா? மற்றைச் சமயங்களின் வேதங்களிலிருந்து ஒரு தருமத்தையாவது மாற்றியமைக்க அதனால் முடியுமா? சிவாகாம தருமங்களை வகுத்த பரமசிவனாருந் தம் போன்றவர் தானென அம்மந்திரி எண்ணிக் கொண்டார் போலும். ஆயினும் அ·தவர் குற்றமன்று. அந்நவீனரின் அப்பறிமுதற் புத்தியே அதற்கு மூலம். அவர் அந்நிலயங்களைக் கண்டவர் கொள்ளையாக்கினர். அவை கேட்பா ரற்றின வாயின. போவார் வருவாரெல்லாம் அவற்றில் கைவைத்தனர். அவற்றின் கற்பைக் கலக்கினர். அம்மந்திரியுந் தம் பங்கைச் செய்ய எத்தனிக்கிறார். தமிழர்ச்சனை முதலிய தம் புதுமைகளைப் புகுத்தவும், அதனாற் புகழ் பெறவும் அந்நவீனருக்கும் அப்போதுதான் இயலும். அதற்கேற்பத் தமிழகத்தில் அவருக்குத் திரண்ட செல்வம், அகன்ற கலகலக் கல்வி, உயர்ந்த பதவி, பரந்த செல்வாக்கு, படாடோபப் பிரசங்க சாமர்த்தியம், சாமானியரை அவருக்கு நலஞ்செய்வது போல் நடித்துத் துணை சேர்த்துக்கொள்ளுஞ் சூழ்ச்சித்திறம், பிற பெருமிதங்கள் எல்லாமிருக்கின்றன. அவை நல்ல சாதகங்கள். அவற்றைக் கொண்டு தம் ஆசையை நிறைவேற்ற அவர் முயல்கின்றனர். அதைவிட அடாத செயல் வேறு முண்டோ? அவ்வக்கிரம நவீனருக்கு - யூதாஸ்காரி யோத்துக்களுக்குப் -புகழ் வரக்கூடும். ஆனால் அது சான்றோரிடமிருந்து வந்த சபாஷ் ஆகாது. ஆகலின் முதலில் அவருடைய அக்கிரமத்தைத் தொலைக்க வேண்டும். சைவ சாஸ்திர விறபன்னரால் அது முடியும். சைவ சமுகத்தில் அவர் அத்தமித்துப் போகவில்லை. இன்றும் எத்தனையோ பேரிருக்கின்றனர். அவர் முற்படுக. சமூகம் பாரம்பரியமாகவே சிவதருமத்தில் ஊறியது தான். அந்நவீனரின் ஆரவாரத்தால் அது தனனை மறந்து கிடக்கிறது. ஆயினும் அது தற்காலிகமே. அவ்விற்பன்னர் தம் கடனைத் தொடங்கட்டும். சமூகம் நிச்சயம் விழித்துக் கொள்ளும். அந்நவீனரைக் கண்டே அவ்விற்பன்ன ரஞ்சுகின்றனர். அவர் காலத்துக்கு முன் தமிழகத்தில் எத்தனையோ சைவத்தமிழ்ப் பெருநூல்கள் மலிந்து கிடந்தன. அவர் தலையெடுத்தனர். அவற்றுட் பல மறைந் தொழிந்தன. அவரே அதற்குக் காரணம். அந்நூல்களை யொழித்த அவர் அம்மொழி யபிமானிக ளாத லெப்படி? அவர் சைவ வேடமும் அவரைச் சமூகத்திற்கு மாற்றிக் காட்டுகிறது. வேடநெறி அவருக்கில்லை. அன்று வைகைக் கரையில் கழுவேறினர் சமணர். அவர் சைவர் பால் வஞ்சந் தீர்த்துக்கொள்ள எண்ணினரோ? அப்படி யானால் அவரே அவ்வேடம் பூண்டு அந்நவீனராய்த் திரிகின்றார். அவர் சுவடிகளே அத்தனைக்குஞ் சான்று. அவ்வுண்மையை அவ்விற்பன்னர் எடுத்துக் காட்டுக. அந்நவீனருக்குக் குலைநடுக்கங் காணும். காலப்போக்கு, உலகப்போக்கு, சமூகப்போக்குகளை யனுசரிக்க வேண்டுமென அவர் அவ்விற்பன்னருக்குப் புத்திகூற வருவர். இலெளகிகத்துக்கு அது சரியாகலாம். சமய விஷயத்தில் அது ஆபத்தே. மேலும் ஆற்று வெள்ளம் மரக்கட்டையை யடித்துக்கொண்டு போகிறது. அக்கட்டைபோலாகுக என்பது அப்புத்தி. அது தகுமோ? அவ்விற்பன்னர் ஆண்மையோ டெழுந்து செயலாற்றுக. சைவ பரிபாலனம் அவர்க்கே கடன். அவர் ஒதுங்கி நின்று அந்நவீனருக் கிடங்கொடுக்கக் கூடாது. கொடுத்தால் அவருஞ் சைவத் துரோகிகளே.மாகாண மொழிப் பகைமை ஆங்காங்கே தலைத்தூக்குகின்றது. பாரத தேசாபிமானத்தால் அது மறையுமெனச் சொல்ல முடியாது. ஏன்? தேசாபிமானம் பலித்த பிறகு தான் அது புறப்பட்டது. அது மறையவேண்டும். அதற்கு வழியொன்றே. அது தான் சமயாபிமானம். சைவ சமயமே இத்தேசத்துச் சனாதன தருமம். அதை தேசமுழுதும் அறிக. ஆசரிக்க. அதற்கானவற்றை அவ்விற்பன்னர் செய்யட்டும். அப்போது ஆந்திரச் சைவர் சைவத் தமிழ் நூல்களை மதிப்பர். தமிழகச் சைவர் சைவத் தெலுங்கு நூல்களை மதிப்பர். அப்படியே பிறவும். அப்படிச் சமயத்துக்கு முதலிடங்கொடுக்க, மாகாண மொழிகளை அதனு ளடக்கிப் போற்றுக. அப்பகைமை யொழிவ துறுதி. அவற்றைமாறிச் செய்தால் அது புகைந்து கொண்டுதானிருக்கும். மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறாமனம், தீமையாம் புறச்சமயங்கள் ஒழித்திடுதிறன், நினைவில் வேறொரு கடவுளை வழிபடாநிலை, இம்மூன்றுமே சைவ சமய மானம். அவற்றை யுடையாரே அதனை யுடையார். அந்நவீனருக்கு அம்மூன்றும் இல்லை. அவரை விடுக. சைவ மக்களுக்குப் பிற சமய தூஷணம் காரியமன்று. ஆனால் சைவ தூஷணத்தை எக்காரணங்கொண்டும் அவர் சகியார். அவருக்கு நாத்திக பயமில்லை. அதனை யொழிக்க அவரால் முடியும். நாத்திகத்துக்குப் பயந்த சமயங்களோடு கூட்டு அவருக்கு அநாவசியம். இறுதியில் அக்கூட்டு கேலிக்கிடமாகும். காங்கிரசுக்குப் பயந்த ஐக்கிய முன்னணிக் கதையைக் காண்க. மேலும் அக் கூட்டால் சமயங்கள் குழம்பும்: எச்சமயியுந் தன்சமயத்தை உள்ளபடி அறிந்து கொள்ளமாட்டான். ஒருக்கால் அரசியல் நிர்ப்பந்தம் அக்கூட்டை அவசியப்படுத்தும். அப்போது அச்சைவர் தம்சமயத்தின் தனி இயல்பைக் காத்துக்கொள்க. அவ்வகையில் அவர் சிறிதும் ஏமாறக்கூடாது. ஏமாறினால் அக்கூட்டு அச்சமயத்துக்கு நாத்திகத்தினுங் கேடாய் முடியும்.சம்ஸ்கிருதம் ஒரு மாகாணத்துக்கோ, இனத்துக்கோ, குலத்துக்கோ, உரியதன்று. உரியதெனச் சொல்பவர் மடவோரே. சைவத்தை அப்படிச் சொல்பவரும் மடவோர் தான், மாகாண மொழிகளெல்லாங் கூவல்கள் அவற்றுள் எதிலும் அச்சமயம் அடங்கிவிடாது. ஏன்? அது குரைகடல். எச்சமயத்துக்குமே நாடு, மொழி, இனம், குலம் பற்றிய பெயர் கிடையாது, சைவத்துக்கும் அ·தில்லை. அந்நவீனருக்கு அது தெரியுமா? அவர் கட்டையும் விழும். அதுவரை அவர் தமிழர் சமயம், தமிழர் மதம் என்றே கத்துவர். அப்படியே அவர் காலங்கழியும். குதிரைக்கொம்பு தான் தமிழர் சமயம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் சைவத்தைத் தமிழர் சமயமென்பாரவர். அது பெயர் மாற்றம். பெயரை மாற்றுவது அடாத செயல். இக்காலைச் சைவத்துக்குக் கேடர் வேறெச் சமயத்தினரு மல்லர். நாத்திகர்தானு மல்லர், அவ்வஞ்சரே, சைவமக்கள் அவரோ டிணங்கிச் சமயதரித்திர ராக வேண்டாம். அவர் சம்ஸ்கிருதத்தையும் பயிலுக! அதிலுள்ள சைவப்பெரு நூல்களையுங் கசடறக் கற்க. அவ்வழியாய்மற்றை மாகாணச் சைவரோடு நூல்களையுங் கசடறக் கற்க. அவ்வழியாய்மற்றை மாகாணச் சைவரோடு அளவளாவுக. அவ்வளவளாவிய வாழ்வு மிக மிக அவசியம். அதுவே அகில பாரத வைதிக சைவ சம்மேளனத்தைக் கூட்டவல்லது. அச்சம்மேளனம் சைவசேவைக்குப் புறப்படட்டும். அச்சமயம் எவ்வளவு விளக்கம் பெறும்! எத்தனை கோடி மக்களுக்குப் பயன் தரும்! அச் சம்மேளனம் இன்றியமையாத தன்றோ? சைவர் அதனை உணர வேண்டாமா? என்று? அன்றே நன்னாள். அவரே சத்தியமான ரோஷமிக்க சைவாபிமானிகள். ஆனால் அவ்வாக்க வேலைக்கு வழியடைக்குங் கல் அந்நவீனரே. அவர் புத்தி தமிழ்ப்பித்துக் கொண்டது. மிகக் குறுகலானது. மிகமிகக் கீழ்த்தரமானது. சைவாபிவிருத்திக்கு அவரை நம்புவதும் ஆற்றைக் கடத்தற்கு மண் குதிரையை நம்புவதும் ஒன்றே. சைவப்பிரச்சார மேடைகளில் ஏற்றுக; அங்கும் அவர் சைவப் பிரச்சாரஞ் செய்யார்; தமிழ்ப் பெருமை, தமிழர் பண்பாடு என்றுதான் கூவுவர். அவரை வைத்துக்கொண்டு சைவமக்கள் என்ன செய்ய? ஆகலின் முதலில் அம்முத்தநாதரை திருத்தியாக வேண்டும். அல்லது அடக்கியாக வேண்டும். அதன் பொருட்டுச் சைவப் பெருமக்கள் இன்றே ஒருப்பட் டெழுக.சைவமே ராஜாங்க சமயம்; பரமசிவனாரே அச்சமய முழுமுதற்கடவுள். சம்ஸ்கிருத வேத சிவாகமங்கள் அவரருளிய முதல் நூல்கள். அவையே பாரத தேச முழுவதற்கும் சைவசமய சர்வ பிரமாண சாத்திரங்கள். அவற்றோடு தமிழ்ச் சைவருக்குப் பன்னிரெண்டு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், ஸ்ரீ சிவஞான மஹாபாஷ்யமும் சர்வ பிரமாணங்கள். இருமொழிகளிலுள்ள அந்நூல்கள்தான் சைவ சமய சாத்திர வரம்பு. அவற்றோடு ஒத்துச் செல்லும் சைவஞான நூல்கள் பிறவுமுள. அவையும் பிரமாணங்களே. அச்சர்வ பிரமாணங்களோடு ஒத்துச் செல்லாத நூல்களோ நூற்பகுதிகளோ பிராமாணங்களாகா. அவை தமிழாயினும் ஒதுக்கத் தகுந்தனவே. அச்சர்வ பிரமாண சாத்திரங்கள் இட்டுள்ள கட்டளைகள் பல. சைவ சமூகம் அவற்றுக் கடங்கவே வேண்டும். அதுவே அச்சமூகத்துக்குக் கெளரவம். அம்முறையில் அச்சமூகத்தின் ரொவ்வொருவரும் சிவதீ¨க்ஷ பெற்றுக்கொள்க. சிவசின்னந் தரித்துக் கொள்க. ஆன்மார்த்த சிவபூசை யெழுந்தருளப் பண்ணிக்கொள்க. சைவ விரதங்களைச் சிரத்தையோடனுட்டித்து வருக. சைவாலயங்களைச் சிவாகம விதிப்படி நிருவகிக்க. அச்சேவையையும் ஆர்வத்தோடு புரிக. குருபூசைகளையும் அவ்விதிப்படி செய்க. சைவ ஆசிரியன்மாரையும் ஏனைச் சிவனடியார்களையும் பொது நீக்கி வழிபடுக. சரியை யாதி சாதனங்களை வழுவாமற் கடைப்பிடிக்க. குடும்பங்களில் நடைபெறுங் கலியாணம், சீமந்தம், சிராத்தம் முதலிய வனைத்தையும் சைவ முறைப்படி அதற்கதற்குரிய மந்திரங் கிரியை யாடிகள் சகிதம் செய்து மகிழ்க. அம்மந்திர மாதியவற்றைச் சிவாகமங்களிலிருந்து கிரமமாகத் திரட்டி வைத்துக் கொள்க. அவற்றுக்கிணக்கமான குலாசார சம்பிரதாயங்களையும் வேண்டுமாயிற் சேர்த்துக் கொள்க. சைவப் பெருநூல்கள் மலிந்து கிடக்கிற தமிழ் சம்ஸ்கிருதங்களை நன்கு பயிலுக. அந்நூல்களை யெல்லாந் திறம்பட கற்றாய்க. தமிழை ஒட்ட வையாமல் சைவத்தை எடுத்து பிற மாகாணங்களிலும் சென்று பரப்புக. பிற சமயங்களைக் குறைகூறற்க. சைவ சமயத்தைப் பிறர் தூஷிக்கவும் இடங் கொடாதிருக்க. அச் சமயம் பற்றிய குழறுபடைப் பிரச்சாரங்களை விடுக. சமூகம் சமயம் பற்றி குழம்புமாறு செய்யற்க. அதனிடம் சமயங்களின் கலவைகளை புகுத்தற்க. தந்நலத்தை மறக்க. சைவ நலத்தையும், ஜன நலத்தையுமே கருதுக. இத்தனையுந் திட்டங்கள். இவை சிலவே. இவற்றுக் கிணக்கமானவற்றையுஞ் சேர்த்துக் கொள்க. இவற்றை நோக்கமாக வைத்து ஊர்தொறும் சைவ சித்தாந்த சபைகளை நிறுவுக. பாரத தேசமுழுவதற்கும் நன்றாம்படி அவற்றைத் திறமாக நடத்துக. அவற்றின் வழியாய்ச் சைவ சமயத்தைப் பரிபாலிக்க. மக்களெல்லாஞ் சைவ நலங்கனிய வாழுமாறு காண்க. அந்நலம் வழிவழி கிடைத்து வருதற்கும் ஆவனவற்றைச் செய்க. சங்கரநயினார்கோயிற் சைவ சித்தாந்த சபையும் அந்நோக்கங் கொண்டே தொண்டாற்றி வருகிறது.

No comments: